கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தும்பிவாடியில் தவசிமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜெயராஜ்(41) என்பவருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் தவசிமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தவசிமணி கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவசிமணி இறந்துவிட்டார். மேலும் ஜெயராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.