கேரளாவின் மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரியாணியில் அட்டை கிடந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவகத்தின் சமையலறை அசுத்தமாகவும், சரியான பராமரிப்பு இன்றி செயல்பட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். அடுப்புக்கு பக்கத்தில் விறகுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து பிரியாணி பாத்திரத்திற்குள் அட்டை விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை வரை உணவகத்தை மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.