பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும் வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி , ‘மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உயர்கல்வி உறுதித்திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்தப்படும்’ என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லுாரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும் உயர்கல்வி துறை பட்டியல் எடுத்து வருகிறது. இந்த திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவங்க உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.