புதுச்சேரி மாநிலத்தின் நிலப் பரப்பு குறைவாக இருந்தபோதிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. அதற்கேற்றவாறு வீடு கட்டுமான பணியும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் கட்டுமானத்துறையில் 1500 பொறியாளர்கள், 900-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மற்றும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் வருடத்திற்கு ரூபாய் 1,000 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக முடங்கி கிடந்த கட்டுமானபணி சென்ற ஓராண்டாக படிப்படியாக வேகமெடுத்து வந்தது. இதையடுத்து ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக வடமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அதிகளவில் அழைத்து வரப்பட்டு, பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் கட்டுமானத்துறையின் மூலப்பொருட்களான செங்கல், கம்பி, சிமென்ட், மணல், ஜல்லி, எம்.சாண்ட், மின்சாதனப் பொருட்கள், ஹார்டுவேர்ஸ், டைல்ஸ், பிளம்பிங் பொருட்களின் விலையானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ரூபாய் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்கப்பட்ட 1 டன் கம்பி, இப்போது ரூபாய் 75 ஆயிரம் முதல் 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஓராண்டில் கம்பியின் விலையானது 90-100 % உயர்ந்துள்ளது. இதேபோல் மின்சாதனப்பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், 30 முதல் 35 சதவீதமும், பெயின்ட், சானிட்டரி பொருட்கள், செங்கல், சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் 10 சதவீதத்திற்கு விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சதுர அடிக்கு ரூபாய் 1,200 முதல் 1,400 வரை இருந்த கட்டுமானச்செலவு இப்போது ரூபாய் 2,000 முதல் 2,200 வரை அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பால் வீடுகட்டி வந்தவர்கள் பணிகளை பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு பணிகளை டெண்டர் எடுத்தவர்களும் பணிகளை நஷ்டம் இன்றி முடிப்பது எப்படி எனத் தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர். தனியார் கட்டுமான பணிகள் மட்டுமல்லாது அரசு பணிகளும் தேக்கமடைந்து வருகிறது. அத்துடன் புது பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கட்டுமான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு திட்டமதிப்பீட்டை மாற்றியமைத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.