தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் தேர்வு செய்து ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
அதன்படி தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்றடுக்கு ஊராட்சி விருதுகளை திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்கள் ஆன விடுதிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்த மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம்கிராம ஊராட்சிகளுக்கான விருதுகள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி, கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மண்மங்கலம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த சின்னப்பட்டி கிராம ஊராட்சி, கன்னியாகுமரி மாவட்டம், இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கங்கலேரி கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கட்டாத்தி கிராம ஊராட்சி ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும்;கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான (VPDP) தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த துவார் கிராம ஊராட்சிக்கும்;குழந்தைகள் நேய கிராம ஊராட்சிகான விருது நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒன்றிய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி, இது போல் சிறப்பாக செயல்பட்டு மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்தியுள்ளார்.