அமெரிக்காவின் மீட் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மீட் ஏரியில் கடந்த 2000 வருடம் முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதனால் மீட் ஏரி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வருகின்ற மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் முறையாக ஏரியின் கரை யோரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உடல் 1970 அல்லது 80 ல் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு நபருடையது என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் மீட் ஏரியிலிருந்து மேலும் பல மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் இது குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வழங்காத நிலையில் ஏரி முழுமையாக வறண்டு போகும் சூழலில் மேலும் பல பேரின் உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.