தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “நாடு முழுவதும் தற்போது சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. நம் மின் தேவை என்பது உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவில் உள்ளது. இதனால் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவையான 17,863 மெகாவாட் எந்தவித தடங்கலுமின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 01.05.2022 அன்று 1.44 இலட்சம் யூனிட்டுகளையும், 08.05.2022 அன்று 4.5 இலட்சம் யூனிட்டுகளையும் யூனிட் ஒன்றிற்கு ரூ.12 வீதம் வெளிமாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. ஆனால் மத்திய அரசு நாளொன்றுக்கு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்ட வந்த நிலையில் முதல்வர் வற்புறுத்தி எழுதிய கடிதத்தின் காரணமாக தற்போது நாளொன்றுக்கு 58 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களிலிருந்து 4,165 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.