கோவில்பட்டியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் அரசு செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டி சென்ற இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று லீக் போட்டிகள் நடந்தது. அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு விளையாட்டு விடுதி அணியும் தாமஸ் நகர் ஹாக்கி அணியும் இறுதி போட்டியில் நேற்று மாலையில் மோதியது.
இதில் 7 க்கு 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றதோடு மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்ற நிலையில் விழாவிற்கு கூடைப்பந்து பயிற்சியாளர் ரத்தினராஜ் தலைமை தாங்க தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகச் செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.