Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி… காவிரி ஆற்றில் குளித்து, பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!!

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன.

தர்மபுரி மாவட்டம், சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதற்கிடையே ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த நீர் வரத்தை  பிலிகுண்டுலுவில் இருக்கின்ற மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளன. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ், காவிரி ஆறு ஆகிய பல்வேறு இடங்களில் குளித்து ஆனந்தம் அடைந்தார்கள். அதன்பின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கிடையே காவிரியாற்றில் உற்சாகமாக பரிசலில் சென்று வந்தார்கள். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார்கள்.

மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றின் அழகை கண்டுகளித்தனர். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்குள்ள கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெற்றது. கோடை வெயில் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் நடைபாதையில் இருக்கின்ற மரத்தடியில் உட்கார்ந்து இருந்தனர். மேலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதங்கள் தடுப்பதற்கு  ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பல பகுதியில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

Categories

Tech |