சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் குவியும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.50 கோடியில் 9 முடிவற்ற பணிகள் திறப்பு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் 24 ஆயிரம் கோடி மதிப்பில் பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது.
கோவையில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் ரூபாய் 750 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு ஆண்டில் நிறைவடையும். சிறுவாணியில் இருந்து 9 கோடி தண்ணீர் தினமும் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் இரண்டரை கோடி லிட்டர் மட்டுமே தண்ணீர் கொடுக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மும்பையில் உள்ளதுபோல் பிளான்ட் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் கோவை மாநகராட்சியில் செய்யாத பணியை செய்ததாக கூறி ரூபாய் 10 லட்சம் மோசடி செய்த அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.