தமிழகத்தில் தக்காளி வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் பேசியதாவது: “தக்காளி வைரஸ் என்பது நுண் கிருமிகளிலிருந்து பரவக்கூடியது. அது சாதாரண வைரஸ். குழந்தைகளின் கன்னத்தில் தக்காளி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தக்காளி வைரஸ் என்று கூறுகிறோம். மற்றபடி தக்காளிக்கும், இந்த வைரஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்கன்குனியா பாதிப்படைந்தவர்களுக்கு இந்த நோய் வருவதாக தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கொல்லத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. கொசுக்கள் மூலமாக இது பரவ வாய்ப்புள்ளது. கேரளாவில் உள்ள சுகாதார துறை அதிகாரியிடம் இது தொடர்பாக பேசி தக்காளி வைரஸ் குறித்து கேட்டறிந்து கொண்டோம். தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.