குடோன்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மலையம்பாக்கம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து தரம் பிரிக்கும் குடோன்கள் அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனில் பற்றி எரியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அதற்குள் தீ அருகில் இருந்த மற்ற குடோன்களுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மூன்று குடோன்களில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.