மெடிக்கல் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவியும், வர்ணிகா(5), வர்ஷினி(3) என்ற இரண்டு மகள்களும் உள்ளார்கள். இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் வேல்முருகன் – அனிதா தம்பதியினர் தங்களுக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என நினைத்து கருவை கலைக்க முடிவு செய்து, கடந்த ஐந்தாம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் மெடிக்கல் கடை நடத்தும் கச்சிமயிலூர் கிராமத்தில் வசித்த முருகன்(56) என்பவரிடம் சென்றார்கள்.
அப்போது அனிதாவிற்கு முருகன் மெடிக்கல் கடையில் வைத்து கருக்கலைப்பு செய்தார். அனிதாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். அனிதாவுக்கு மாலை வரை சிகிச்சை அளித்தும் அவர் சுய நினைவுக்கு வரவில்லை. இதனையடுத்து தனது காரில் வேல்முருகன் அனிதாவை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு முருகன் கொண்டு சென்றார். மருத்துவமனையில் அனிதாவை சேர்த்துவிட்டு வேல்முருகன் வெளியே வருவதற்குள் முருகன் காரில் தப்பித்துவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு மருந்து கடை உரிமையாளர் முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள். முருகன் மெடிக்கல் கடை நடத்துவதற்கு எந்த படிப்பும் படிக்கவில்லை என்பதும், அவர் இதற்கு முன் ஜவுளிக்கடை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.