ஒடிசாவில் போலி சாமியார் ஒருவர் 3 மாதங்களாக ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பாலாசோர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த பெண்ணிற்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் கணவர் வீட்டில் சிறிது தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கணவரின் குடும்பத்தினர் ஒரு சாமியாரை நாடியுள்ளனர். அப்போது அவர் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமென்றால் இந்தப் பெண் சில மாதங்கள் தன்னுடன் தங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து சாமியாரின் வீட்டில் சேர்த்திருக்கின்றனர். அப்போது அவரது மகனையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்து அந்த சாமியார் கடந்த 79 நாட்களாக வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் மகன் கண்முன்னே நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் அந்த சாமியார் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், சகோதரர் மற்றும் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.