Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி…!!!

மின்னல் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வையாவூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்குமார். இவருடைய மனைவி அஞ்சலை. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு பவித்ரன்(14), நந்தகுமார்(12) என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இதில் பவித்திரன் ஒன்பதாம் வகுப்பும், நந்தகுமார் ஏழாம் வகுப்பும் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியை முடித்து விட்டு வீடு திரும்பினார்கள். தாய் தந்தை இரண்டு பேரும் கூலி வேலைக்கு சென்று இருந்ததால் மழை வருவதை பார்த்து சகோதரர்கள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கரையில் கட்டிப் போட்டிருந்த தங்களது பசு மாடுகளை ஓட்டி வர சென்றார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரம் சுற்று வட்டார கிராமங்களில் திடீரென  இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது கால்நடை ஓட்டிவர சென்ற பவித்ரன், நந்தகுமார் ஆகிய இருவரும் மீது மின்னல் தாக்கியது. இதனால் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

இதனையடுத்து பசு மாடுகளை ஓட்டி வர சென்ற பவித்ரன், நந்தகுமார் இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி சென்று பார்த்தபோது, ஏரிக்கரையில் இருவரும் மயங்கிக் கிடந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் எழுப்பி பார்த்தபோது பவித்ரன் மட்டும் மயக்கம் தெளிந்து எழுந்தார். ஆனால் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் பள்ளி மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |