நகைக் கடன் தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீடு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக, கூட்டுறவு நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்காளர்களுக்கு அளித்து இருந்தது.இந்நிலையில் திமுக ஆட்சியை பிடித்த பிறகு, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடகு வைத்து இருப்பவர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பின்பு அதில் விவசாய கடன் பயிர் கடன் வாங்கியவர்களை தவிர்த்து குடும்பத்தில் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இறுதி பட்டியலில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு நகை கடன் தள்ளுபடி காண சான்றிதழும் நகைகளும் திரும்ப ஒப்படைக்கும் பணி நடைபெற்றது. அந்த வகையில் சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி பெற்றிருப்பதாகவும் 35 லட்சம் பேர் தகுதி இல்லாதவராகவும் தெரிவித்தனர். இச்செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நகைக் கடன் தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீடு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணை படி, பொது நகை கடன் தள்ளுபடி திட்டம் 2021 ன் கீழ் நகைக் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்ற வலை தளத்திலும் மற்றும் கடந்த 8.4.2022 அன்று விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வலைதளமான www.vrdccbank.in லும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த அரசாணையின்படி, தள்ளுபடிக்கு தகுதியான பட்டியலை வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்தில், தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களது ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.