ஹரியானா மாநிலமான கர்னாலில் பயங்கரவாதிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஒருவர் லூதியானாவைச் சேர்ந்த நபர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களுடைய பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக எஸ்.பி. ராம் பூனியா கூறியிருப்பதாவது “கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடி பொருட்களுடன்கூடிய 3 இரும்பு கன்டெய்னர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சந்தேகிக்கும் நபர்கள் தொடர்பாக உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து, இது பற்றி போலீஸ் குழுவை எச்சரித்தோம். பஸ்தாரா சுங்கச்சாவடிக்கு அருகே தடுப்புக் காவல் போடப்பட்டு, பின் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தோம்.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இருந்த வாகனத்தின் எண்ணில் “டிஎல்” என்று இருக்கிறது. எனினும் வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட குர்பிரீத் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ட்ரோனைப் பயன்படுத்தி எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்ட வெடிப்பொருட்களைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பாக நாந்தெட்டில் வெடிகுண்டுகளை வீசியதும் தெரிந்தது. இது குறித்து கைதானவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.