மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலிங்கம் தனது நண்பரான கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் சாத்தன்விளை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முத்துலிங்கத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த கௌதமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.