ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு நாளை வரை நீடித்து உள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாகாணம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு 4 காவல்துறையினர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேற்று நள்ளிரவு வரை காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாப் நகர், தேவ் நகர், சூர்சகர், கந்தா பல்சா, சர்தர்புரா, ஜோத்பூரில் உதய் மந்திர், நகோரி கேட் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாவட்ட காவல் துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஊரடங்கு நாளை வரை நீடிக்கும். 14 வழக்குகள் கீழ் பதிவு செய்து நேற்று வரை வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 97பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 104 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவ சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், செய்தித்தாள்களை விநியோகிப்பார்கள், தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள் இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவில்விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷு குப்தா சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு மொபைல் இணைய சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.