லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தோம் என்று கைதான 2 வாலிபர்கள் காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகில் குருராஜபாளையத்தில் வசித்து வந்தவர் லாரி டிரைவர் பூபாலன் (40). இவர் மீது பைக்குகள் திருடியதாக வேப்பங்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து பூபாலன் கடந்த ஆறு மாதங்களாக வேலூரை அடுத்துள்ள அப்துல்லா புரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறத்தில் ஒரு முட்புதரில் பூபாலன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தார். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதில் பூபாலனை அதே பகுதியில் வசித்த ஓட்டுநர் அரி கிருஷ்ணமூர்த்தி(29), பரத்(21) ஆகியோர் இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம், பூபாலன் அப்துல்லாபுரத்திற்கு வந்த பிறகு அரி கிருஷ்ணமூர்த்தி, பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்கள் 3 பேரும் ஒன்றாக மது அருந்தினார்கள். கடந்த மாதம் 15ஆம் தேதி அந்தப் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் பூபாலனின் செல்போன், டிரைவிங் லைசன்ஸ், ஏ.டி.எம் கார்ட் ரூபாய் 4000 அடங்கிய பர்ஸ் அனைத்தையும் அவருடைய நண்பர்கள் எடுத்துவிட்டார்கள்.
அதற்கு பூபாலன் செல்போன், லைசன்ஸ் மட்டும் தந்து விடுங்கள் என்று அவர்களிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் அதை கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பூபாலன், நண்பர்கள், அவர்களின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவருக்கும், அரிகிருஷ்ணமூர்த்தி, பரத் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பரத், அரிகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருக்கும்போது பரத் செல்போனில் பூபாலனை தொடர்புகொண்டு வாக்குவாதம் செய்தார்கள்.
இதனால் கோபம் அடைந்த பூபாலன் வீட்டில் கிடந்த இரும்பு ராடை கொண்டு வந்து பரத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து பூபாலன் வைத்திருந்த இரும்பு ராடை பிடுங்கி அவரின் தலையில் அடித்தார்கள். அதன்பின் அவரை இழுத்து அங்கு உள்ள முட்புதரில் வீசினார். இதனால் படுகாயம் அடைந்த பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதைத்தொடர்ந்து அரி கிருஷ்ணமூர்த்தி, பரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் பதிவாகி உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.