சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திண்டல் வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(68). இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிகுமார்(37) என்ற மகனும் உள்ளார்கள். பிரியதர்ஷினி கல்யாணமாகி கணவருடன் வசித்து வருகின்றார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணயாகவில்லை. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
மேலும் ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தந்தையிடம் கேட்டுள்ளார். இதனால் ரவிக்குமாருக்கும், அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்கக் கோரி கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கு பழனிசாமி மறுத்ததால் கோபம் அடைந்த ரவிக்குமார் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையை கொடூரமாக தாக்கி உள்ளார்.
இதனால் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் நடந்த சம்பவத்தை வெளியே செல்லக்கூடாது என்று தனது தாயையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். தனது கணவரை அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்து விட்டு பின் நள்ளிரவில் ருக்குமணி கணவரை எழுப்பிய போது அவர் எழும்பவில்லை. மகன் கட்டை கொண்டு பலமாக தாக்கியதால் கணவர் பழனிசாமி இறந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நேற்று காலை இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜெரியை கொண்டுவந்து கைரேகை நிபுணர்களை வைத்து ரேகைகளை பதிவு செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தலைமறைவாக இருந்த ரவிக்குமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். பெத்த மகனை தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.