கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்த தமிழ்நாடு அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நக்ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேருவதற்கு மதிப்பெண் சான்று தேவைப்படுகிறது.
இதனால் தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்குவதற்கு வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணை மேற்கொண்டது.
அப்போது தமிழ்நாடு அரசு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் தேர்வு நடத்தாததால், மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும், அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்லாமல் தேர்வு நடத்தப்படாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாதென கூறிய நீதிபதிகள், இவ்வழக்கை தள்ளுபடிசெய்து உத்தரவு பிறப்பித்தனர்.