நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் வடக்கு,மத்தியப் பகுதிகள் மற்றும் ஒருசில மாவட்டங்களில் பகல் பொழுதில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் வெப்ப பக்கவாதம் போன்ற காரணங்களால் மாநிலத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக மகாராஷ்டிராவில் வெயிலுக்கு இந்த அளவு உயிரிழப்பு நிகழவில்லை. இந்த ஆண்டு உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளதால் அம்மாநில மக்கள் கோடை வெயிலை கண்டு நடுங்கிப் போய் உள்ளனர். மேலும் ராஜஸ்தான்,ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.