3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா நாட்டில் தென்மேற்கு லாகோஸ் மாநிலத்தில் ஓனிக்போ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து இந்த பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த மீட்புப் படையினர் 8 பேர் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது போன்று கட்டிடங்கள் இடிந்து விபத்து ஏற்படுவது நைஜீரியா நாட்டில் தொடர்கதையாகி இருக்கிறது. குறிப்பாக பழைய கட்டிடங்கள், சரியாக திட்டமிடல் இல்லாதது, விதிமுறைகளை மீறிய கட்டுமானம் மற்றும் கட்டுமானத்தின் போது தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் காரணமாக விபத்துகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.