கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எலக்ட்ரிக் வாகன விபத்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி எலக்ட்ரிக் வாகனம் விபத்து ஏற்பட்டால் எப்படி தவிர்ப்பது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனத்தின் சார்ஜ் 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை இருக்கும் வகையில் வாகனத்தை இயக்க வேண்டும். 90 சதவீதத்திற்கு மேல் அதிக சார்ஜ் செய்வது அல்லது 15 சதவீதத்திற்கு கீழ் செல்வதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக வாகனத்தை பயன்படுத்தாத நிலையில் பேட்டரி 30 சதவீதம் என்ற அளவில் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின்சார வாகனத்தை நிழலில் நிறுத்தி வைக்க வேண்டும். பேட்டரி டெர்மினல்கள் சேதமடைந்தாலும் தீ பிடிக்க வாய்ப்புள்ளது.
வாகனத்தின் பேட்டரி வெப்பம் அடைவது போல் உணர்ந்தால் உடனடியாக யாருமில்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். வாகனம் எதிர்பாராதவிதமாக தீ பிடித்தால் சுயமாக தீயை அணைக்க முயற்சிக்காமல் அவசர சேவைகளை அழைக்க வேண்டும். வாகனத்தின் தீ அணைந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனத்தில் அருகே செல்ல வேண்டாம். மின்சார வாகனம் வாங்கும்போது பிஎம்எஸ் என்றழைக்கப்படும் பேட்டரி கண்காணிப்பு அமைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனை பின்பற்றினால் எலக்ட்ரிக் வாகன விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.