தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்ப நிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பால் வெயில் கொளுத்தும். இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் வெயில் அதிகரிப்பால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
இதையடுத்து மே 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக இந்த நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.