டெம்போ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு சந்தையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் டெம்போ ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டெம்போவில் ஓட்டுநர் உட்பட 4 பேர் இருந்தனர். இந்நிலையில் குமரி- நெல்லை எல்லையில் முப்பந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது கோவை நோக்கி வேகமாக சென்ற ஆம்னி பேருந்து டெம்போ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டெம்போ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதற்கிடையே ஆம்னி பேருந்து டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. அப்போது டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.