பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் போக்குவரத்து துறை மேலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் பேசியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்துகள் செயல்பட வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் பேருந்துகளை ரேக்கில் போட்ட பின் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும்.
மேலும் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் ரோட்டில் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு பாலத்தின் மீது செல்லாமல் சர்வீஸ் ரோட்டில் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். பேருந்துகளை வேகமாக இயக்க கூடாது. அப்படியே இயக்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அடுத்து பயணிகளிடம் அங்கீகரிக்கப்பட்டபடி பேருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி வசூலித்தால் பேருந்தின் அனுமதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கற்பகம் கலை, அறிவியல் கல்லூரி அருகே சர்வீஸ் ரோட்டை தவிர்க்காமல் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இயங்காமல் இருந்தாலும், உரிய திருப்புமுனைக்கு செல்லாமல் பேருந்து நிலையத்திற்கு வந்தால் அரசு பேருந்துகளுக்கு வருவாய் குறையும். மேலும் பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்