இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.5. டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இதை 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மின் வினியோகம் சீராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.