வீடுகளின் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வீட்டு கடன் மற்றும் வீட்டு கடனுக்கான EMI போன்ற செலவுகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் வீட்டுக் கடனுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய அசல் மற்றும் வட்டி தொகை கிடைக்கும் சலுகைகள் குறைவாக தான் உள்ளன. அதனால் வீட்டுக்கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கே கூடுதல் வருமான வரி சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் மத்தியில் வீட்டுக் கடன் EMI சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மத்திய பட்ஜெட் தாக்கலின் போது வீட்டுக் கடன் இஎம்ஐ தொகைக்கு வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் வீட்டுக் கடன் இஎம்ஐ சலுகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. வீட்டுக் கடன் இஎம்ஐ தொகையில் அசல் மற்றும் வட்டி இரண்டுமே கலந்துதான் இருக்கும். வருமான வரி சட்டம் 80c கீழ் வீட்டுக்கடன் அசல் தொகையை திருப்பி செலுத்துவதற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சலுகை பெற்று கொள்ளலாம்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இதே கோரிக்கையை ரியல் எஸ்டேட் துறை முன்வைத்தது. அதனால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கிடைக்கும் எனவும் வீடு விற்பனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் வருமான வரி சலுகைகளை மத்திய அரசு வழங்கவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.