ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட இயலாது. அதே நேரத்தில் அதிகாரிகள் ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, நடுநிலை வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என்கின்ற பணியாளர் விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.
ஐ.ஏ.எஸ், மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட சீட் பெறும் எண்ணத்தில் அதிகாரிகள் செயல்படுவது தற்போது அதிகரித்து வருகிறது என்று கூறிய நீதிபதிகள் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது 1968ஆம் ஆண்டு பணியாளர் சேவை விதிமுறையின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.