தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். மணிமுத்தாறு அணையின் கீழ் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் எனவும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அணையிலிருந்து பெருங்கால் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளில் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சேர்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பன்குளம், கல்லிடைகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.