Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தி.மு.க கவுன்சிலருக்கு கத்திக்குத்து… 6 பேர் சேர்ந்த கும்பல்… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ் …!!!

தி.மு.க கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியில் வசித்து வருபவர் வீரா (32). இவர் சமீப காலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இவர் தி.மு.கவில் சேர்ந்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்கு காரில் வந்துள்ளார். அதன்பின் குழந்தைகளை காரில் இருக்க வைத்துவிட்டு வீரா பொருட்களை வாங்கி விட்டு காரில் ஏறினார். அப்போது அங்கு 6 பேர் சேர்ந்த கும்பல் பைக்கில் வந்து  வீராவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வீராவை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வீராவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |