நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 25ஆம் தேதி இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஜாதிவாரியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது அங்கு பயிலும் செல்வ சூரியன் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் தாக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அந்தப் பள்ளியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ளது. காயமடைந்த மாணவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 25ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அதே பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடையே மோதல் ரீதியிலான இந்த கொலையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவன் செல்வசூரியன் மீது பெல்ட் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதில் தலையில் அடிபட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.