தொழிலாளியை வெட்டி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் அருகுவிளை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த வாலிபர் முருகனை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.