தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலியார் 1,500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமாரி வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக தொடர்ந்து வந்த ஒரு வேன் மற்றும் 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனங்களில் மூட்டை மூட்டையாக 1,200 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்த ஈரோட்டை சேர்ந்த ரமேஷ்குமார், லெட்சுமணன்(23), ரஸ் ஐஸ்வந்த்சிங்(25), சேலத்தை சேர்ந்த விஜயகுமார்(27), அசோக்(30) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கன்னியாகுமரி கோவளம் பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அருப்புகோட்டையை சேர்ந்த கலைச்செல்வன் என்பதும், இவர் புத்தளம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்வதும் கண்டுபிக்கபட்டது. இதனையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 325 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் கலைசெல்வனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.