கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கை மோசமாக இருப்பதாக பல இடங்களில் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது இருந்த மதிப்பும், அச்சமும் சிறிதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் நிலை உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. அதன்தொடர்ச்சியாக சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை ஒண்டிபுதூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இரு பிரிவினர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர். இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்துடன் ஓரமாக ஒதுங்கி பார்த்துள்ளனர். மாணவர்கள் இரு பிரிவினராக பிரிந்து தாக்கி கொண்டதை அந்த வழியாக சாலையில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
டிஜிபி அறிவுறுத்தியும் பயனில்லை? கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் @tnpoliceoffl @policecbecity #crime #schoolstudents pic.twitter.com/sbXaShJ0y9
— Divakar 😎 (@divakarMathew) April 28, 2022
தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை வழங்கியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் தொடர் மோதல் போக்கை நிறுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வாயிலாக அறிவுறுத்தி இருந்தார். அதன்பிறகும் மாணவர்கள் பொது இடங்களில் இது போன்று மோதிக் கொள்ளும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.