மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோகூர் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உட்பட 6 பேருடன் சென்றார். இந்நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்றுகொண்டு திடீரென மண்ணெண்ணையை உடலில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக 6 பேரையும் மீட்டு அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேன்களையும் பறித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்ததில் ராஜேந்திரனின் மகன் அம்பேத்கர் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக கோகூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வேறு ஒருவரை உதவியாளராக நியமனம் செய்ததால் அவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையே கோகூர் பகுதியில் உள்ள குவாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அம்பேத்கருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கடந்த 4-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் சார்பில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட குவாரிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குவாரியின் உரிமையாளர் தனது அடியாட்களுடன் அம்பேத்கரின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த அம்பேத்கர் தற்போது நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து அம்பேத்கரின் தந்தை ராஜேந்திரன் மற்றும் தாயார் விஜயலட்சுமி இருவரும் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் அவர்களது புகார் மனுவை பெற மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். எனவே அம்பேத்கர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாங்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.