தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தேரில் எப்படி மின்சாரம் பாய்ந்தது ? என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சம்பவத்தை நேரில் பார்த்த களிமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், “திருநாவுக்கரசு கடவுளுக்காக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 நாள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் நேற்று கோவிலில் இருந்து இரவு 10 மணி அளவில் புறப்பட்ட தேர் ஊரை வலம் வந்து மீண்டும் கோவிலுக்கே திரும்ப சென்று கொண்டிருந்தது. இறுதியாக ஊரை சுற்றி விட்டு ஒரு வீட்டில் தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை நடந்தது.
அதன்பிறகு இன்று அதிகாலையில் தேர் வளைவில் திரும்பும் போது பின்னால் வந்து கொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது. இதையடுத்து ஜெனரேட்டரை சரி செய்து கொண்டிருந்த போது தேரின் உச்சியை சாலையின் மேல் சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்தக் கம்பி உரசியுள்ளது. இதனால் இரும்பு அமைப்பாலான தேர் மற்றும் ஜெனரேட்டரை கொண்டு வந்த வாகனம் மீது உயர்மின் அழுத்த கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ஜெனரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர், தேங்காய் உடைப்பதற்காக தேரில் அமர்ந்திருந்த நபர், தேரை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆனால் தேரை சாலையில் திரும்பும்போது தேரின் உயரத்தை குறைக்க உதவும் மடக்கி தூக்கும் அமைப்பு பயன்படுத்தப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.