இந்தியாவில் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 2,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே பயன் பெற முடியும். தற்போது வரை 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
வங்கி கணக்கில் தொகையை பெறுவதற்கு உரிய வழிமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கேஒய்சி செயல்முறையை அவசியம் முடிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் வங்கி கணக்குகள் மூலம் கிசான் கடன் அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. அதற்காக தமிழகத்தில் சிறப்பு முகாம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து முகாமில் கடன் அட்டை பெற பதிவு செய்யலாம் என்று தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் முகாமில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் முறைப்படி பதிவு செய்வது எப்படி மற்றும் தவறான பதிவுகளை தவிர்ப்பது எப்படி என்ற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கக்கூடிய சலுகைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமாக கூறுவார்கள். மேலும் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட உழவன் செயலி பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்.