கார் மற்றும் வேனில் கடத்தப்பட்ட ஐந்து லட்சம் மதிப்புமிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீஸார் கைது செய்தார்கள்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நள்ளிரவு 12 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது இரண்டிலும் 50 மூட்டை குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் எடை 462 கிலோவாகும்.
போலீஸார் வேன் மற்றும் காரை பறிமுதல் செய்தார்கள். அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்குமென கூறுகின்றார்கள். இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது வேன் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்துள்ள மிடிநாயக்கன்பட்டி பகுதியில் வாழ்ந்துவரும் மாரிமுத்து என்பதும் கடத்தி வந்தவர்கள் குரோம்பேட்டை பகுதியில் வாழ்ந்துவரும் சகோதரர்களான முத்துக்குமார் மற்றும் முத்து ராஜ் என்பதும் தெரிந்தது. இதனால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்கள்.