கொடைக்கானலில் நிலவிய குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்றனர்.
சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கடந்த சில வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை அதிகமாக பெய்ததால் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவி வரும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுமட்டுமல்லாது மலைப்பகுதியில் பசுமையாக காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக மழை குறைந்ததால் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை இதமான வெப்பத்துடன் இயல்பான சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையில் வார விடுமுறை என்பதால் கடந்த இரண்டு தினங்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும் நிறைய பேர் கொடைக்கானலுக்கு வந்து அங்கு நிலவிய இதமான சூழ்நிலையை கண்டுகளித்தனர். பைன் மரக்காடுகள், குணா குகை, பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலை, பில்லர் ராக் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலும் வட்டார பகுதியில் உள்ள அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளித்து ஆனந்தம் அடைந்தனர். இதேபோன்று பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் பூக்கள் பூத்து குலுங்குதே சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்தனர். அதுமட்டுமின்றி நட்சத்திர ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.