கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பின் கொரோனா 3வது அலையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். தற்போது கொரோனா 4வது அலை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. டெல்லியை பொறுத்தவரையிலும் கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் சென்னை ஐஐடியில் கொரோனா பரவியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகள், அமைச்சர்களோடு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கடந்த இருநாட்களின் பாதிப்பு விபரத்தை கணக்கில் கொண்டால் சென்ற சனிக்கிழமை நிலவரப்படி 53 புதிய பாதிப்பு பதிவாகியது. இவற்றில் சென்னையில் மட்டும் 36 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. அதன்பின் நேற்றைய நிலவரப்படி புதிதாக 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தமிழகத்தில் எக்ஸ் இ வகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆகவே இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் வட மாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் கொரோனா சோதனைகளை அதிகமாக மேற்கொள்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும். மேலும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்துதல், தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் செயல்படுத்தப்படுதல், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக பாதிப்புகள் பதிவாவதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இருந்தாலும் முழு ஊரடங்கு, கடைகள் திறக்கும் நேரம் மாற்றம், பொதுப்போக்குவரத்தில் கட்டுப்பாடு போன்றவற்றிற்கு தற்போது வாய்ப்பு இருக்காது என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.