சேலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சேலத்தின் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக அஸ்தம்பட்டி, பெரமனூர் உட்பட பல்வேறு இடங்களில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
மேலும் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனத்த மழை பெய்தது. இதில் 1000-க்கும் அதிகமான வாழைகள், தென்னை மரங்கள், பனை மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் தென்னை, பனை மரங்கள் ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டது. இத்தகவலை அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய் துறையினர் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதன்பின் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.