இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.
ஆனால் இந்த யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்திருக்கிறார். இதுதொடர்பாக வானொலி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘வெவ்வேறு கொள்கைகளுடன் ஒருவரையொருவர் முகம் பார்த்து பேச முடியாத கட்சிகளைக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதால் என்ன பயன்? எந்த பயனும் ஏற்படாததுடன், இது சாத்தியமும் இல்லாதது. அப்படி இடைக்கால அரசு தேவை என்றால் அது எனது தலைமையில்தான் நடக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘மக்கள் (போராட்டக்காரர்கள்) பொறுமையுடன் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும். மேலும் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம்’ எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கைக்கு எரிபொருள் வாங்க ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் வழங்க இந்தியா சம்மதித்து உள்ளதாகவும், மேலும் ரூ.7 ஆயிரத்து 500 கோடி கடன் பெற பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இலங்கை நிதி மந்திரி அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குறைந்தபட்சம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, இதற்காக உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனும் நிதி உதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.