80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியில் பாவாயி(85) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்துள்ளார். மேலும் அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியால் நீந்தி மேலே ஏறி வர முடியவில்லை.
இதனையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கிணற்றில் இறங்கி மூதாட்டியை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து சுமார் 1 மணி நேர முயற்ச்சிக்கு பிறகு கிணற்றில் விழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்டனர். இதற்குப்பின் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.