தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு , மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பாக டெல்லியில் ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. மேலும் இதன் காரணமாக நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்நிலையை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு, மருத்துவ கல்வி இயக்குனரான நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இது தொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள் , மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள் , மருந்துக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் மற்றும் தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். மேலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.