சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள மேலக் கொடுமலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(22), திரு.வி.க நகரை சேர்ந்த விஜயபாண்டி(25), காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை(30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை குடிமைப்பொருள் குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.