சேலத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்ற இரண்டு பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் வசித்து வருபவர்கள் கல்யாணி(63), ஷோபா(56), ரேவதி(52), மாதேஸ்வரன்(39), அர்ச்சனா (35). இந்நிலையில் சொந்தக்காரர்களான 5 பேரும் இணைந்து நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் ஊத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை மாதேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதன்பின் கோவிலில் சாமியை வழிபட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் ஊத்து மலை அடிவாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோ எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி இரண்டரை அடி உயர தடுப்புச்சுவரிலிருந்து 12 அடி பள்ளத்தில் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் நேற்று முன்தினம் அர்ச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கல்யாணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற இரண்டு பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அன்னதானபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.