கர்நாடகாவில் பி.யூ.சி. 2 ம் ஆண்டிற்கான பொது தேர்வு நாளை முதல் தொடங்கி நடைபெறுகிறது.
கர்நாடகாவில் உள்ள பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள்.
தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிம் செய்யலாம் என்று கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது. தேர்வு தினமும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. அதனால் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என்று அரசு மறைமுகமாக தெரிவித்திருக்கிறது.
மே மாதம் 18-ந் தேதி அன்று இந்த தேர்வு முடிவடைகிறது. கர்நாடகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு(2021) பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஓரு வருடத்திற்கு பிறகு பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.